ECI : 100 கோடி வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ECINET செயலி.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Election Commission of India Launches ECINET | தேர்தல் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய வாக்காளர்கள் பல விதமான செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தும் நிலையில், அனைத்து தேர்தல் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ECI : 100 கோடி வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ECINET செயலி.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Published: 

04 May 2025 18:40 PM

டெல்லி, மே 4 : இந்தியாவில் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களை தெரிந்துக்கொள்வதற்காகவும், அது தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காகவும் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI – Election Commission Of India) இன்று (மே 4, 2025) அறிவித்துள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகள் மற்றும் இணையதள சேவைகளை ஒன்றிணைந்து ஒரே இடத்தில் சேவைகளை வழங்கும் வகையில் இந்த புதிய ECINET என்ற செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த செயலியில் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அனைத்து தேர்தல் சேவைகளுக்கும் ஒரே செயலி – இந்திய தேர்தல் ஆணையம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல வகையான மற்றும் பல கட்டமாண தேர்தல்கள் நடைபெறும். இந்த தேர்தல்களில் வாக்களிப்பதற்காக இந்திய குடிமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பு தகுதியான வாக்காளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலில் இடம்பெறும் நபர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் வெவ்வேறு இணையதளங்களை பயன்படுத்த வேண்டியதாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்களுக்கு பயனளிக்கும் வகையில், மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய செயலியை இந்திய தேர்தல் ஆணையம் கட்டமைத்து வருவதாக கூறியுள்ளது. தேர்தல் மற்றும் அது சார்ந்த தேவைகளுக்காக பொதுமக்கள் பல வகையான செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பதிவு

இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த ECINET செயலி மூலம் சுமார் 100 கோடி வாக்காளர்கள் பயனடைவார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.