பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்.. என்ன நடந்தது?
Bomb Threat To PM Office : பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவர் தொலைபேசி மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகப்பட்டினம், மே 1: டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் கோயில்கள், பூங்கா, பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்ப்டடு வருகிறது.
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல் போன் மூலமாகவும், இமெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த இடத்திற்கு சென்று சோதனை செய்தால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவருகிறது. இப்படி தான் சமீக காலங்களில் நடந்து வருகிறது.
அதோடு, அரசு அலுவலங்கங்கள், முதலமைச்சர்கள் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. அண்மையில் கூட, கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு, அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடி அலுவலகத்திற்கு 2025 ஏப்ரல் 29ஆம் தேதி போன் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
என்ன நடந்தது?
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகப்பட்டினல் இருந்து பிரதமர் அலுவலகத்தில் வெடி குண்டு மிரட்டல் வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய உளவு பிரிவு மூலம் உள்ளூர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நாகப்பட்டினம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் கைது செய்யப்பட்டார். இவர் பிரதமர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீடு, அப்பா பைத்தியசாமி கோயில், பிரெஞ்சு தூதரகத்திற்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து சோதனையிட்டதில் புரளி என்பது தெரியவந்துள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக முதல்வர் ரங்கசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மேலும், 2025 ஏப்ரல் 30ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனால், பாதுகாப்புப் படையினர் விரிவான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். முழுமையான சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இருப்பினும், அடுத்த இரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் தொடரும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.