13 AUG 2025

விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பது ஏன்?

Credit: Getty

உலக அளவில் விமான பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல நூறு கிலோ மீட்டர்களை கூட சில மணி நேரங்களில் பயணம் செய்ய விமானங்கள் மிகவும் உதவியாக உள்ளன. 

இதன் காரணமாக தான் பலரும் விமானங்களில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு விமானத்தில் பயணம் செய்யும் நபர்கள் ஒன்றை கவனத்திருப்பார்கள். அதுதான் விமானத்தின் ஜன்னல்கள்.

விமானத்தின் ஜன்னல்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல்களை போல சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ இருக்காது. விமானத்தில் இருக்கும் ஜன்னல்கள் வட்ட வடிவிலாக இருக்கும். இது அழகுக்காக இல்லை. இதற்கு பின்னால் அறிவியில ரீதியான காரணம் உள்ளது. 

விமானத்தில் தரையில் இருக்கும்போது வெளிக்காற்றின் அழுத்தமும், விமானத்தில் உள்ளே உள்ள காற்றழுத்தமும் ஒரே மாதிரியானதாக இருக்கும். இதுவே விமானம் பறக்கும்போது வெளிப்புற காற்றழுத்தம் குறைந்துவிடும்.

இந்த சூழலில் விமானத்தின் உள்ளே இருக்கும் பயணிகள் சுவாசிப்பதற்காக விமானத்தின் உள்ளே செயற்கையாக காற்றழுத்தம் பராமறிக்கப்படும். இதனால், விமானத்தின் உடற்பகுதியில் தொடர்ந்து அழுத்த வேறுபாடு ஏற்படும். 

இந்த நிலையில், ஜன்னல் சதுர வடிவத்தில் இருந்தால் அதன் நான்கு மூலைகளிலும் அழுத்தம் அதிகமாக குவியும். இதனை அறிவியலில் Stress Concentration என கூறுகிறார்கள். 

தொடர்ந்து ஏற்படும் இந்த அழுத்தம், மூலைகளில் சிறிய விரிசல்களை உருவாக்கி, காலப்போக்கில் அவை பெரிதாகி, விமானத்தின் பாதுகாப்பையே பாதிக்கும் நிலையை ஏற்படுத்திவிடும். 

இதுவே வட்ட அல்லது வளைத்த வடிவிலான ஜன்னல்கள் இருக்கும்போது, விமானத்திற்குள் வரும் அழுத்தம் எல்லா பகுதிகளுக்கும் சமமாக சென்று சேறும். 

இதன் காரணமாக எந்த ஒரு இடத்திலும் அதிக அழுத்தம் உருவாகாமல், ஜன்னலும் விமானத்தின் உடலும், நீண்ட காலம்  மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். 

இந்த வடிவமைப்புக்கு பின்னால் ஒரு சோகமான பின்னணியும் உள்ளது. அதாவது, 1950 காலக்கட்டத்தில் விமானத்தில் இருந்த சதுர வடிவிலான ஜன்னல்களால் விபத்துகள் ஏற்பட்டது தெரிய வந்த நிலையில், இத்தகைய வட்ட வடிவத்தை பெற்றுள்ளன.