25 AUG 2025

குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதில் இவ்வளவு சிக்கல்களா?

Credit: getty

தற்போதைய காலக்கட்டத்தில் மொபைல் போன் மனிதர்களின் அன்றாட வாழ்வின் முக்கிய கருவியாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்துகின்றனர். 

பொழுதுபோக்கு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்காக பலரும் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். மொபைல் போன் மனிதர்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருந்தாலும் அதில் சில சிக்கல்களும் உள்ளன. 

உதாரணமாக அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதன் காரணமாக கண், கழுத்து, மூளை உள்ளிட்டவற்றில் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால், குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் மொபைல் போனை அதிகம் பார்க்கின்றனர். 

குழந்தைகள் அடம் பிடிக்காமல் இருக்கவும், சமத்தாக சாப்பிடவும் பெரும்பாலான பெற்றோர்கள் மொபைல் போனை கொடுக்கின்றனர். ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சிறு வயதில் குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக குழந்தை பருவத்தில் அதிக அளவு ஸ்மார்ட்போன் பார்ப்பதன் மூலம் நினைவாற்றல் குறைவதற்கும், குழந்தைகள் படிப்பில் பின் தங்கி இருப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

சிங்கப்பூரை சேர்ந்த சுமார் 502 குழந்தைகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த சிக்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மொபைல் போன் பார்க்கும் நேரத்தை கணக்கிட்டு அவர்களின் ஆற்றல் திறன் மதிப்பிடப்பட்டுள்ளது. 

6 வெவ்வேறு வயது குழந்தைகளை பிரித்து அவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, எந்த வயது குழந்தைகளை அதிகம் மொபைல் போன் பார்ப்பது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிய இவ்வாறு பிரித்துள்ளனர். 

1 வயது மற்றும் 6 வயது குழந்தைகளை சோதனை செய்து பார்த்தபோது அவர்களுக்கு மிக குறையவான் கல்வி திறன் மற்றும் நினைவாற்றல் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.