டெல்லி மும்பை விரைவுச் சாலையில் நூஹ் அருகே அடையாளம் தெரியாத கனரக வாகன மோதியதில் காரில் சென்ற தம்பதி பலத்த காயமடைந்து 8 மணி நேரம் உயிருக்கு போராடி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து நூஹ் சதார் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் குமார் கூறுகையில், போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ராஜஸ்தானின் கரெளலியைச் சேர்ந்த லச்சி ராம் மற்றும் அவரது மனைவி குசும் லதா ஆகியோர் என்பது தெரியவந்தது. டெல்லியின் புத் விஹாரில் உள்ள மங்கேரம் பூங்காவில் வசித்து வந்த இவர்கள் தங்களது காரில் டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் நுஹ் பகுதியில் உள்ள நோசெரா கிராமம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கி தம்பதி இருவரும் பலத்த காயமடைந்து காரின் உள்ளே சிக்கிக் கொண்டனர். பரபரப்பான டெல்லி மும்பை விரைவு சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் காரின் உள்ளே தம்பதி சுமார் 8 மணி நேரம் உயிருக்கு போராடி பலியாகி உள்ளனர்.