திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள கோவிலூர் சிவன் கோயிலில், சிதிலமடைந்த கருவறையை மீண்டும் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணியின்போது தங்கக்காசு புதையல் கிடைத்துள்ளது. தோண்டத் தோண்ட தங்கக் காசுகள் கிடைத்துக்கொண்டே இருந்ததால் தொழிலாளர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். ஜவ்வாது மலையில் உள்ள கோவிலூர் சிவன் கோயில், மூன்றாம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் கருவறை, ராஜகோபுரம் உள்ளிட்டவை சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது, கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. கருவறை பணிக்காக பள்ளம் தோண்டியபோது, தோண்டத் தோண்ட தங்கக் காசுகள் கிடைத்துள்ளன.