AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை.. இபிஎஸ் வலியுறுத்தல்..

தற்போது நிலவும் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கூடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் கடும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கடும் மின் தட்டுப்பாடு.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை.. இபிஎஸ் வலியுறுத்தல்..
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 May 2026 10:51 AM IST

சென்னை, மே 24: தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின்தட்டுப்பாட்டை சரிசெய்ய புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு சாக்குப்போக்கு சொல்லாமல், மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவர்களின் மேம்போக்கான மற்றும் உறுதியற்ற நடவடிக்கைகளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இரவு நேரங்கள் மக்களுக்கு “தூங்கா இரவுகளாக” மாறியிருப்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!

பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம்:

பகல் நேர மின்வெட்டால் சமையல் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆங்காங்கே மின்சார வாரிய அலுவலகங்களை முற்றுகையிடுவதும், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகள் மற்றும் சென்னை தண்டையார்பேட்டையில் இரண்டாவது நாளாக இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் வீதியில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சிக் கால மின் மேலாண்மை:

கோடைக் காலம் வந்தாலே தமிழகத்தின் மின் தேவை அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவர். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆண்டுதோறும் கோடைக் கால மின் தேவையைச் சமாளிக்க முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த காலங்களில் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தமிழகம் முழுவதும் தினமும் பல மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு நிலவியது. ஆனால், இரண்டே ஆண்டுகளில் அந்த நிலைமை மாற்றப்பட்டு, தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றப்பட்டது.

கோடைக் காலக் கூடுதல் மின் தேவையைக் கணக்கிட்டு காற்றாலை, சோலார் மற்றும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியைப் பெருக்குவதோடு, மத்திய அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை அவர் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.

தொழில்துறையினர் கடும் பாதிப்பு:

தற்போது நிலவும் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கூடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் கடும் பொருளாதார இழப்பைச் சந்திக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க: “12 நாள் ஆட்சியில் 30க்கும் மேற்பட்ட குற்றங்கள்”.. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. கோவை சிறுமி கொலை வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!!

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை:

எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு “இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்” என்று சாக்குப்போக்குகள் எதையும் சொல்லிக் கொண்டிருக்காமல், மக்களின் அவதியைப் போக்கும் வகையில் மின்வெட்டை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us