Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேப்டாப் வழங்குவதா?” நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!!

Free Laptops For College Students: திமுக அரசு ஆட்சிக்கு வந்து 55 மாதங்களாக தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் சொன்ன, மடிக்கணினியும் வழங்காமல், டேப்லெடும் வழங்காமல் கிடப்பில் போட்டது ஏன்? என்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தற்போது அறிவிப்பது ஏன் எனவும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேப்டாப் வழங்குவதா?” நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!!
நயினார் நாகேந்திரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Dec 2025 08:26 AM IST

சென்னை, டிசம்பர் 07: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் (Assembly elections) நெங்கும் சமயத்தில் மடிக்கணினி வழங்குவதாக அறிவித்த, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் (free laptops) வரும் டிசம்பர் 19-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், வெளியான இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!

ஆட்சி முடிய 70 நாட்கள் உள்ள நிலையில், லேப்டாப் அறிவிப்பு:

அந்தவகையில், திமுகவின் ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகமே என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அதோடு, மக்களை ஏமாற்றி திசைதிருப்ப முயலும் முதல்வருக்கு சில நேரடிக் கேள்விகளை எழுப்புவதாகவும் கூறியுள்ளார்.

ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் தாமதம் ஏன்?

அதாவது, ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் தாமதமாக மடிக்கணினிகள் வழங்குவதேன்? என்றும் ஜெயலலிதாவின் திட்டத்தை நிறுத்த முயற்சித்த பின்பு மாணவர்களின் கோபத்திற்கு ஆளானதாலேயே மடிக்கணினிகள் வழங்க முடிவு செய்துள்ளீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? எனவும் திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 163-ல், டேப்லெட் மற்றும் 10GB டேட்டா கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தவே, டேப்லெட் வழங்குவோம் என்று அறிவித்தீர்கள். அப்படியிருக்க, 55 மாதங்களாக மடிக்கணினியும் வழங்காமல், டேப்லெடும் வழங்காமல் கிடப்பில் போட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடையாதா?

மேலும், அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிக்குள் நுழையும் முன்பே மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், உங்களது ஆட்சியில் பள்ளி மாணவர்கள் ஏன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்? என்றும் உங்களது ஆட்சியில் கடந்த பட்ஜெட்டில் 20 லட்சம் மடிக்கணினிகளுக்கு ஒதுக்கீடு செய்ததாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்றோ 10 லட்சம் மடிக்கணினிகள் மட்டுமே கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. மீதமுள்ள 10 லட்சம் மடிக்கணினிகள் என்னவாயின? உங்களுக்கு ஊழல் செய்வது புதிதல்ல என்பது தெரியும். ஆனால், மாணவர்களின் கல்வியிலும் ஊழல் செய்ய வேண்டுமா? எனவும் அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கியது.. டிச.11ல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!!

தொடர்ந்து, மக்களிடம் இத்தனை கேள்விகள் எழும் வேளையில், வெற்று விளம்பரத்திற்காக இத்திட்டத்தை அரைகுறையாகச் செயல்படுத்த நினைக்கும் திமுக அரசை, மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.