ஆன்மிகப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
Mehandipur Balaji Temple: ராஜஸ்தான் மெகந்திபூரில் தீய சக்திகளை விரட்டும் சக்திவாய்ந்த அனுமன் கோவிலான பாலாஜி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அசைவம், பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவில் தவிர்க்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. எவரும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற விசித்திர விதி பின்பற்றப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெகந்திபூர் பாலாஜி கோவில், வடஇந்தியாவில் மிகவும் அமானுஷ்யமான மற்றும் சக்திவாய்ந்த ஒரு ஆன்மிகத் தலமாகப் பார்க்கப்படுகிறது. ‘பாலாஜி’ என்ற பெயரைக் கேட்டவுடன் பலரும் இதனைப் பெருமாள் கோவில் என்று தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால், இது உண்மையில் குழந்தை வடிவில் வீற்றிருக்கும் அனுமனுக்கான பிரசித்தி பெற்ற ஆலயமாகும். பில்லி, சூனியம் மற்றும் தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுபட நினைப்பவர்கள், இப்பகுதிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இந்த ஆலயத்திற்குள் சென்று வர முடியும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
வித்தியாசமான கட்டுப்பாடுகளும் விதிகளும்
இந்த ஆன்மிகத் தலத்திற்குச் செல்லும் பக்தர்களுக்குப் பல்வேறு விசித்திரமான மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, கோவிலுக்குச் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பூண்டு, வெங்காயம் மற்றும் அசைவ உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அதேபோல, தரிசனம் முடிந்து வீடு திரும்பிய பிறகும் அடுத்த 11 நாட்களுக்கு இந்த உணவுக் கட்டுப்பாட்டைத் தொடர வேண்டியது அவசியமாகும். தீய சக்திகள குணமடைய வரும் நோயாளிகள் தங்களைச் சங்கிலியால் பிணைத்துக் கொள்வது, கொதிக்கும் நீரைத் தலையில் ஊற்றிக் கொள்வது போன்ற பார்ப்போரைக் குலைநடுங்கச் செய்யும் பல காட்சிகள் இங்கு அரங்கேறுகின்றன. இவற்றை எக்காரணம் கொண்டும் ஒளிப்பதிவு செய்யவோ அல்லது அங்கு நடப்பவற்றைக் கண்டு சிரிக்கவோ கூடாது.
பிரசாத விநியோகத்தில் உள்ள ரகசியம்
இங்கு வழிபாட்டிற்குச் செல்லும் முன் ‘தர்கா’ எனப்படும் ஐந்து லட்டுகள் அடங்கிய சிறப்புப் பிரசாதப் பெட்டியை வாங்கிச் செல்ல வேண்டும். அதனை பாலாஜி மற்றும் பைரவர் சன்னதிகளில் படைத்த பிறகு, பூசாரிகள் தரும் மீதமுள்ள பிரசாதத்தை அங்கேயே உட்கொள்ள வேண்டும். இந்த கோவிலில் வழங்கப்படும் நீர், உணவு அல்லது பிரசாதம் என எதையுமே எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடாது; பிறருக்கும் பகிர்ந்தளிக்கக் கூடாது என்பது இங்குள்ள எழுதப்படாத சட்டமாகும்.
திரும்பிப் பார்க்கக் கூடாத விசித்திர விதி
ஆலய வளாகத்திலும் அதன் வெளியேயும் பல்வேறு வினோதமான மற்றும் அமானுஷ்யமான சத்தங்கள் கேட்ட வண்ணம் இருக்கும். ஆனால், தரிசனம் முடித்துவிட்டு வெளியேறும் எவரும் பயந்து போய் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் நேராகச் சென்றுவிட வேண்டுமே தவிர, மீண்டும் உடனடியாக உள்ளே செல்லவோ அல்லது திரும்பிப் பார்க்கவோ கூடாது. அவ்வாறு பார்த்தால், அங்குள்ள எதிர்மறைச் சக்திகள் நம்மைத் தொடர்ந்து வீட்டிற்கே வந்துவிடும் என்ற ஒரு பயங்கரமான நம்பிக்கை நிலவுகிறது.