Children’s Day: குழந்தைகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? பள்ளிகளில் இன்று எப்படி கொண்டாடலாம்?
Children’s Day 2025: தேசிய குழந்தைகள் தினமான இன்று நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும், சாதி, மதம், நிதி அல்லது அரசியல் அந்தஸ்தை கடந்து, கல்வி, வளர்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறத் தகுதியானவர்கள் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு. அவரது பிறந்தநாளை நினைவுகூர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி “தேசிய குழந்தைகள் தினம்” (National Children’s Day) கொண்டாடப்படுகிறது. அதோடு, நேரு குழந்தைகள் மீது அதீத பாசம் கொண்டிருந்தார். அதன் காரணமாக குழந்தைகளால் அன்புடன் அவர் ‘நேரு மாமா’ என்றே அழைக்கப்பட்டார். 1889 நவம்பர் 14ல் பிறந்த நேரு, 1964 மே 27 அன்று பதவியில் உள்ள போதே மறைந்தார். தனது வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் நலன் மீது பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் உரிமைகள் ஆகியவற்றில் தான் ஒரு சமூகத்தின் அடித்தளமும், ஒரு நாட்டின் எதிர்காலமும் உள்ளதாக தீவிரமாக நம்பியவர் நேரு.
மேலும் படிக்க: Children’s Day 2025: குழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகள் உரையாற்ற ஆசையா? இப்படி பேசினால் ஆசிரியர்களும் ரசிகர்களாக மாறுவார்கள்!
தனது ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை மக்களுக்கு புரிய வைத்து ஊக்குவித்தார். அதன்படி, ஒவ்வொரு குழந்தையும், சாதி, மதம், நிதி அல்லது அரசியல் அந்தஸ்தை கடந்து, கல்வி, வளர்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறத் தகுதியானவர்கள் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது. அதோடு, குழந்தைகளுக்கு எதிர்கால சிந்தனையை புகட்டுவது மட்டுமின்றி, சமூகத்தில் குழந்தைகள் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் இந்நாள் உள்ளது.
விடுமுறை கிடையாது, கொண்டாட்டம் மட்டும்:
ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கொண்டாடப்பட்டது. இருப்பினும், 1964ல் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதியை குழந்தைகள் தினமாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாள் அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை தினம் அல்ல, ஆனால் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று இந்த நாளின் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் தினத்தை பள்ளிகளில் எப்படி கொண்டாடுகிறார்கள்?
* பள்ளிகள், பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இன்று மிகுந்த உற்சாகத்துடன் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும்.
* இந்த நாளில் மாணவர்களுக்கு சாக்லேட், இனிப்புகள் போன்றவை வழங்கப்படும்.
* அது மட்டுமின்றி, குழந்தைகளின் நலன், உரிமை மற்றும் திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்படும்.
* பாடல், நடனம், ஓவியம், இசைக்கருவி வாசித்தல் போன்ற திறமைகளை வெளிப்படுத்தலாம்.
* வகுப்பில் கதை சொல்லலாம், நல்ல சிந்தனை கொண்ட கட்டுரையை வாசித்து காட்டலாம்.
* மாணவர்களும் வீட்டிலேயே ஓவியம் வரையலாம், வண்ணம் தீட்டலாம், சிறிய கைவினைப் பொருட்கள் செய்யலாம்.
குழந்தைகள் நமது பொக்கிஷம் மட்டுமல்ல, நமது எதிர்காலமும் கூட. நாம், குழந்தைகளின் களங்கமற்ற அன்பையும் எல்லையற்ற ஆற்றலையும் அவர்களுடன் சேர்ந்து இன்றைய தினம் கொண்டாடுவோம்.